இத்தனையாண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்குச் செய்தது என்ன? - நிர்மலா சீதாராமன் கேள்வி

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதெல்லாம் கீழ்த்தரமான அரசியல், இத்தனையாண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்குச் செய்தது என்ன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை பாரதிய ஜனதா கட்சி நடத்தி வருகிறது.

இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அதன்ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி ஆவார். அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் என அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்கு செய்தது என்ன? அப்போது எதையும் செய்யாமல் இப்போது வேண்டுமென்றே கேள்வி எழுப்புகிறார்கள்.

பிரதமர் தமிழகத்துக்கு வரும் போது கருப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான அரசியல். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகையிலும் தி.மு.க. இடையூறாக இருக்கிறது.

மோடி சுயநலம் இல்லாத பிரதமர். அதனால் தான் அவரால் தைரியமாக செயல்படுகிறார். ஒரே ஒரு எம்.பி.யை தான் தமிழக மக்கள் கொடுத்தார்கள் என்று பிரதமர் மோடி தமிழகத்தை ஒதுக்கி விடவில்லை. ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.

தானும் நல்லது செய்யாமல் மற்றவர்களையும் செய்ய விடாமல் தடுக்கும் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். கூட்டணி குறித்து யோசிக்காமல் பாரதீய ஜனதாவினர் தேர்தல் பணிகளை தொடங்குங்கள். இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது” என்று பேசியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

Google+ Linkedin Youtube