'ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி; மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்': பாஜக கட்சி தலைவர் விஜய் வர்ஜியா ஆவேசம்

சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. உடனடியாக மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா வலியுறுத்தியுள்ளார்.

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்குத் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராக வேண்டும். அவரைக் கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.

இது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா கொல்கத்தாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீ்வ் குமார் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த உத்தரவையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட்ஸ் விசாரணைக்கு மாநில அரசும், போலீஸாரும் தொடர்ந்து இடையூறு செய்து வந்துள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, சிபிஐ எந்த நடவடிக்கை எடுக்கவிடாமல், விசாரணை நடத்தவிடாமல் இடையூறு செய்தார். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக இப்படி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் " எனத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

" உச்ச நீதிமன்ற உத்தரவு என்பது சிபிஐ அமைப்புக்குக் கிடைத்த தார்மீகவெற்றியாகும். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சிபிஐ முன் ஷில்லாங்கில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சிபிஐ விசாரணைக்கு ஏன் ஒத்துழைக்க மறுத்துவந்தீர்கள், சிபிஐ முன் ஏன் ஆஜராகவில்லை என்பதுதான் எங்களுடைய மிகப்பெரிய கேள்வியாகும்.ஏராளமான சிறு முதலீட்டாளர்கள், மக்களின் பணம் சிட்பண்ட்ஸ் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி ஏன் அமைதியாக இருந்தார், மற்ற கட்சிகள் ஏன் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்பதுதான் எங்கள் கேள்வியாகும்.

இந்த விசாரணை மிகவும் நியாயமான முறையில் கண்டிப்பாக நடக்க வேண்டும். இதை அரசியலாக்கக்கூடாது. சிபிஐக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகப் பார்க்கிறேன் "

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube