சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களுக்கு அதிக டிமாண்ட்: ஸ்டாலின்

சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக டிமாண்ட் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை), சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திமுகவினர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அங்கு ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம்:

"வைதீக திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களுக்கு எப்படி டிமாண்ட் இருக்குமோ அதேபோல இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக டிமாண்ட். வைதீக திருமணங்கள் பற்றி பேசி ஸ்டாலின் இப்படிப் பேசி விட்டாரே என சிலர் நாளைக்கே வாட்ஸ் அப்பில் அதையெல்லாம் சித்தரித்து, ஜோடித்து அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களை நம்பித் தான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இனியும் அரசியல் நடத்துவோம். அதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்திய பின்னர், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டார். இதனால் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகப் போகிறது. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தார். இதுவரைக்கும் அது நடக்கவில்லை.

ஜெயலலிதா எப்படி முதல் மாநாட்டை ஆடம்பரமாக செலவு செய்து நடத்தினாரோ, அதைவிட அதிக செலவு செய்து வீண் விளம்பரம் செய்து இரண்டாவது மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அந்த மாநாட்டுக்கு ரோடுகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கோட் சூட் அணிவித்து கட்டாயப்படுத்தி வரவழைத்து இருக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும் அதில் அடக்கம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன. சட்டப்பேரவையைக் கூட்டட்டும், ஆதாரத்தோடு அதனைச் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அந்நிய முதலீடுகளைப் பொறுத்த வரைக்கும் தமிழகம் 21 சதவீதம் குறைவாகப் போய்விட்டது என்ற அபாயகரமான செய்தி வெளியாகியுள்ளது. திட்டங்கள் என்ற பெயரில் நாடகம் நடத்துவதோடு நாட்டைக் குட்டிச் சுவராக்கும் முயற்சியிலே இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Google+ Linkedin Youtube