சட்டவிரோத பணப் பரிமாற்றம்: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.

லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட  சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் சில தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதால், வதேராவுக்கு பிரதிபலனாக சொத்துக்கள் வாங்கி தரப்பட்டதாக பாஜக புகார் கூறி வருகிறது.

இந்த புகார் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டெல்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். வரும் 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அப்போது அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிப்ரவரி -6ம் தேதி வதேரா ஆஜராவார் என உறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி, வதேரா நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.  சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சில கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு வதேரா பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இரண்டாவது நாளாக இன்றும் வதேரா டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது லண்டன் சொத்துக்கள் குறித்த சில இ-மெயில்கள் பற்றி வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுபோலவே லண்டன் வீடு உள்ளிட்ட சொத்துகள் தமக்கு சொந்தமானது அல்ல என வதேரா மறுத்ததாக தெரிகிறது. வதேராவுடன் அவரது வழக்கறிர்ஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இரண்டு மணிநேர விசாரணைக்கு பிறகு வதேரா மதிய உணவுக்காக புறப்பட்டுச் சென்றார்.

தனது மனைவி பிரியங்கா சமீபத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அரசியல் பழிவாங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.

Google+ Linkedin Youtube