பாமக இருக்கும் கூட்டணியில் நிச்சயம் விசிக இருக்காது: திருமாவளவன் பேட்டி

பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்று அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 'தி இந்து' விடம் (ஆங்கிலம்) சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினை அண்மையில் சந்தித்துப் பேசினீர்கள். இதில் மக்களவைத் தேர்தலில் உங்களுக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்டதா?

இல்லை. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஸ்டாலினைச் சந்தித்டேன். அப்போது நாங்கள் நடத்திய 'தேசத்தைக் காப்போம்' மாநாட்டில் கலந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

பின்னர் அரசியல் குறித்துப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து எதுவும் பேசவில்லை.

பாமக இணையும் கூட்டணியில் விசிக இருக்குமா?

இல்லை. பாமகவுடன் என்றைக்குமே விசிக கூட்டணி வைக்காது. தர்மபுரி சம்பவத்தில் இளவரசன் இறந்தபிறகு, என்னையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் பாமகவினர் அவதூறாகப் பேசுகின்றனர்.

நாங்கள் லவ் ஜிகாத் (காதலின் பெயரால் மத, சாதி மாற்றம் செய்வது) செய்வதாக சேற்றை வாரி இறைக்கின்றனர். என்னுடைய வாழ்க்கையும் இங்கே குறிவைக்கப்படுகிறது.

நாங்கள் இரண்டு விஷயங்களில் தெளிவாக இருக்கிறோம். எங்களின் ஆதரவு பாஜகவுக்கு இல்லை. பாமக கூட்டணி வைக்கும் இடத்தில் விசிக இணையாது.

திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முயற்சிக்கிறது என்று செய்திகள் வெளியாகின்றனவே?

பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதற்காக சாத்தியக் கூறுகள் குறைவு. ஆனால் பாமக இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும். இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்பது எனது அனுமானம்.

உலகம் இருக்கும்வரை திராவிடக் கட்சிகளுடனும் தேசியக் கட்சிகளுடனும் கைகோர்க்க மாட்டோம் என்று அறிவித்த பாமக என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜக - அதிமுக கூட்டணி சாத்தியமா?

அதிமுக யாருடைய அழுத்தமும் இல்லாமல் முடிவெடுத்தால், அதன் கூட்டணியில் நிச்சயமாக பாஜக இருக்காது. ஆனால் பாஜக அரசு, மக்களவைத் தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்கக் கோரி அழுத்தம் கொடுக்கும். இது திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Google+ Linkedin Youtube