மீண்டும் சபரிமலைக்குச் செல்லும் பிந்து, கனகதுர்கா: பிப்.12-ம் தேதி ஐயப்பனைத் தரிசிக்க திட்டம்

ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களில் ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய  பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்னால் இருவரும் இதைத் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு, வலது சாரி அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் இருவரும் தங்கி இருந்தனர். ஆனால், வீடு திரும்பிய இருவருக்கும் தற்போது கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

கனகதுர்கா தனது வீட்டுக்குச் சென்றபோது, சபரிமலை விவகாரம் தொடர்பாக அவரின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடித்து வீடு திரும்ப முயன்ற கனகதுர்காவை, வீட்டினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தின் உதவியோடு வீட்டுக்குச் சென்றார் கனகதுர்கா. அதேபோல பிந்துவும் பிரச்சினைகளைச் சந்தித்தார்.

இதுதொடர்பாகப் பேசிய பிந்து, ''மத ரீதியான வழிபாட்டை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. நான் ஐயப்பனை வழிபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

கோயில் நடை திறக்கப்படும் பிப்ரவரி 12-ம் தேதி இருவரும் மீண்டும் சபரிமலைக்குச் செல்ல முயற்சிப்போம். நானும் கனகதுர்காவும் எதிர்கொள்ளும் அவமரியாதைகள் அரசியலமைப்பின் கொள்கைகளை அவமதிக்கின்றன'' என்றார்.

முன்னதாக, இருவரின் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ''கோயிலுக்குச் சென்றதாலேயே இவர்கள் இருவரும் சமூகப் புறக்கணிப்பைச் சந்தித்து வருகின்றனர். கடைக்காரர்கள் கூட, இவர்களைத் தங்களின் கடைகளுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை.மகள் ஐயப்பனைத் தரிசித்ததற்காக, பிந்துவின் அம்மா கொலை மிரட்டலை எதிர்கொண்டுள்ளார்'' என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube