படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்த நயன்தாரா

‘Mr. லோக்கல்’ படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், கடந்த புதன்கிழமையுடன் (பிப்ரவரி 6) நயன்தாரா சம்பந்தப்பட்டக் காட்சிகள் முடிவடைந்தன. கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.

நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார்.

Google+ Linkedin Youtube