தென்னந்தோப்பில் கிடந்த 2 அடி உயர கோபுர கலசம் போலீசார் கைப்பற்றி விசாரணை

மேலகிருஷ்ணன்புதூர், 

மேலகிருஷ்ணன்புதூரை அடுத்த கீழக்காட்டுவிளையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சாக்குமூடையில் மர்ம பொருள் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு சாக்கு மூடையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். 

அப்போது, அதில் 2 அடி உயரமுள்ள செம்பால் செய்யப்பட்ட கோவில் கோபுர கலசம் இருந்தது. மேலும், கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் நவதானியங்கள், நாணயங்கள் எதுவும் இல்லை. 

இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர், கோவில் கோபுர கலசத்தை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து கலசம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டது. 

யாரோ மர்மநபர்கள் கலசத்தை திருடி தென்னந்தோப்பில் வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கலசம் எந்த கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது?, உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்களா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Google+ Linkedin Youtube