லக்னோ விமான நிலையத்தில் அகிலேஷ் யாதவ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தம்: உ.பி.சட்டப்பேரவையில் கடும் அமளி

லக்னோவில் இருந்து அலகாபாத் செல்ல முயன்ற சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோ விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த தகவல் உ.பி. சட்டப்பேரவையில் எதிரொலித்ததையடுத்து, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று லக்னோவில் இருந்து விமானம் மூலம், அலகாபாத்(பிரயாக்ராஜ்) செல்ல திட்டமிட்டிருந்தார்.

அலகாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். ஆனால், லக்னோ விமானநிலையத்துக்கு இன்று வந்த அகிலேஷ் யாதவை அதிகாரிகள் விமானம் ஏறவிடாமல் தடுத்து, அலகாபாத் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " அலகாபாத்தில் உள்ள அலகாபாத் பல்கலையில் மாணவர் அமைப்புத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றுவிடுவேன் என அச்சப்பட்டு என்னை விமான நிலையத்தில் பாஜக அரசு தடுத்துவிட்டது " எனத் தெரிவித்திருந்தார்.

அதுதொடர்பான புகைப்படத்தையும், போலீஸாருடன் தாங்கள் பேசுவது தொடர்பான காட்சியையும் அகிலேஷ் யாதவ் வெளியிட்டிருந்தார்.

லக்னோ விமானநிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி, உ.பி. சட்டப்பேரவையில் உள்ள சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அவையில் மையப்பகுதியில் அமர்ந்து கொண்டு முழுக்கமிட்டனர்.

சமாஜ்வாதி எம்எல்ஏ நரேந்திரவர்மா கூறுகையில், " உ.பி.யில் ஆளும் அரசு ஜனநாயகத்தைக் கொலை செய்ய முயற்சிக்கிறது. எங்கள் தலைவரை அலகாபாத்துக்கு செல்ல அனுமதி மறுக்கிறது. யோகியின் சர்வாதிகார ஆட்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாது " எனத் தெரிவித்தார். அதன்பின் அவையில் கூச்சல், அமளி அதிகமாகவே நண்பகல்வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களிடம் கூறுகையில், " அலகாபாத் பல்கலைக்கு அகிலேஷ் யாதவ் சென்றால், இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்படும். மேலும், அகிலேஷ் யாதவ் கும்பமேளாவுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கைக் காக்கவே அரசு முயற்சி எடுக்கிறது. அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகமே அகிலேஷ் வருகையை எதிர்க்கிறது" எனத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube