முதல் பார்வை: எல்கேஜி

லால்குடியில் சாதாரண வார்டு கவுன்சிலராக இருக்கும் இளைஞன் வியூகம் வகுத்து தமிழக முதல்வராக உயர்ந்தால் அதுவே 'எல்கேஜி'.

லால்குடி கருப்பையா காந்தி (ஆர்ஜே பாலாஜி) வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.  தன் அப்பா அழகு மெய்யப்பன் (நாஞ்சில் சம்பத்) மாதிரி தோற்றுப்போன அரசியல்வாதியாக இல்லாமல் வெற்றிபெற்ற அரசியல் தலைவராக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக கார்ப்பரேட் கம்பெனியுடன் பேசி தமிழகத்தின் ஆளுமையாக குறுகிய காலத்திலேயே வளரத்  திட்டமிடுகிறார். முதல்வர் ஆவுடையப்பன் (அனந்த் வைத்தியநாதன்) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் முதல்வருக்கு வந்த நோயை எதிர்த்து நூதனப் போராட்டம் நடத்துகிறார் பாலாஜி. இதனால் மாநிலம், நாடுகள் தாண்டி பரவலான கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார். துணை முதல்வர் போஜப்பன் (ராம்குமார்) இதைக் கவனிக்கிறார். இடைத்தேர்தல் சமயத்தில் பாலாஜிக்கு எம்.எல்.ஏ சீட் தருகிறார். இவரை எதிர்த்து ராமராஜ் பாண்டியன் (ஜே.கே.ரித்தீஷ்) போட்டியிடுகிறார்.

30 வருடமாக மக்கள் மனங்களை வென்ற ஜே.கே.ரித்தீஷை ஆர்ஜே பாலாஜி எப்படி எதிர்கொள்கிறார், அதிலிருக்கும் தடைகள் என்ன, பாலாஜி தன் செல்வாக்கை எப்படி உயர்த்திக் கொள்கிறார், தனக்கு எதிரான தாக்குதல்களை எப்படி முறியடிக்கிறார் போன்ற கேள்விகளுக்கு திரைக்கதை ஜாலியாகப் பதில் சொல்கிறது.

கதை, திரைக்கதைக்காக ஆர்ஜே பாலாஜியும் அவரது நண்பர்களும் பெரிதாக மெனக்கெடவில்லை. நடப்பு அரசியல் நிகழ்வுகளையும், சம்பவங்களையும் ஒரே மிக்ஸியில் அடித்து கொஞ்சம் உல்டா பண்ணி ஜிகினா வேலைகள் சேர்த்து ஒரு முழு நீள அரசியல் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அது படம் முழுக்க சிரிப்புக்கான சத்தமாக வெடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஆர்ஜே பாலாஜி ஜெயித்திருக்கிறார். இயக்குநர் கே.ஆர். பிரபு கதைக்குத் தேவையான அளவுக்கு நடிகர்களைச் சரியாகக் கையாண்டிருக்கிறார்.

நகைச்சுவை நடிகர், கதாநாயகனின் நண்பன் என்றே பார்த்துப் பழக்கப்பட்ட ஆர்ஜே பாலாஜி இதில் ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகியுள்ளார். அதற்காக அவர் நடித்துத் தள்ள வேண்டிய அவசியம் இல்லாத படம் இது. வாய் வலிக்கப் பேசுவது, மக்களை ஏமாற்றுவது, பெரிய அரசியல் தலைவராக ஆசைப்படுவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார். தேர்தலில் தோற்பதற்கான அறிகுறிகள் தென்பட, அப்பாவே அதற்கான காரணம் என்று தெரியவர 'என்னை உனக்குப் பிடிக்காதாப்பா' என்று கேட்டு வருத்தப்படும் காட்சியிலும், மக்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். முதல்வராக இருக்கும் ராம்குமாரைப் பார்த்து ஓவர் ரியாக்ட் செய்வது மட்டும் நெருடல்.

ப்ரியா ஆனந்த் படத்தின் கதையோட்டத்துக்கும், திருப்பத்துக்கும் பயன்பட்டிருக்கிறார். ஜே.கே.ரித்தீஷுக்கு நல்ல முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாஸாக என்ட்ரி ஆகும் அவர் காமெடியாகிப் போவதுதான் கதாபாத்திரச் சறுக்கல்.

மயில்சாமி சிறந்த உறுதுணைக் கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார். நாஞ்சில் சம்பத் வீணடிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனைக் காட்சியில் மட்டும் அவர் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறார்.

விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவும் ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம். லியோன் ஜேம்ஸ் இசையில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் ரீமிக்ஸ் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.

முதல்வர் உடல்நலக் குறைவு, மருத்துவமனை வாசம், எம்.எல்.ஏக்கள் மருத்துவமனையிலேயே கிடப்பது, துணை முதல்வர் முதல்வர் ஆவது, இடைத்தேர்தல், டெல்லியிடம் ராசி ஆவது, 20 ரூபாய் நோட்டு கொடுத்து வாக்களிக்கச் சொல்வது, ஆற்றில் தெர்மாக்கோல் விடுவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்றவை காட்சிகளாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 3000 கோடிக்கு சிலை, ஊழல் ஆட்சி, பினாமி ஆட்சி போன்றவை போகிற போக்கில் வசனங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், இதில் எதுவும் சுவாரஸ்யமும், புதுமையும் இல்லாமல் கோடிட்டுக் காட்டுகிற, நினைவுகூர்கிற சம்பவங்களாகவே உள்ளன.

தேர்தல் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என எல்லோரையும் கேலி, கிண்டல் செய்த துணிச்சல் பாராட்டுக்குரியது. மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை குறித்த அழுத்தமான செய்தியும் தெளிவாகச் சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் படத்தில் லாஜிக், நம்பகத்தன்மை என்று எதுவும் இல்லாமல் செயற்கையாகவே திரைக்கதை நகர்வது பலவீனம். அதுவும் அந்த செய்தியாளர் சந்திப்பு அபத்தக் களஞ்சியத்தின் உச்சம். செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியைத் தோற்கடிப்பதற்காகச் செய்யப்படும் செயல்பாடுகள் முகச்சுளிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சம கால அரசியலை நய்யாண்டி செய்த வீடியோ மீம்ஸ், ட்ரால்களின் தொகுப்பாக  'எல்கேஜி' சிரிக்க வைக்கிறது.

Google+ Linkedin Youtube