'அயர்ன் மேன்' கதாபாத்திரத்தில் விஜய்; தோர் கதாபாத்திரத்தில் அஜித்: சமந்தா, காஜல் விருப்பம்

'அவெஞ்சர்ஸ்' தமிழில் எடுக்கப்பட்டால் அயர்ன்மேனாக விஜய் நடிக்கலாம் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ படமான ’கேப்டன் மார்வெல்’ வரும் மார்ச் 8 (மகளிர் தினம்) அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

 ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று (01.03.2019) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் தமன்னா , சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியத் தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'அவெஞ்சர்ஸ்' தமிழில் எடுக்கப்பட்டால் யாரை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என சமந்தாவிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சமந்தா, "அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கலாம். அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் மற்றும் காமெடி சென்ஸ் விஜய்யிடம் உள்ளது'' என்றார்.

காஜல் அகர்வால் பேசுகையில், ''நான் மார்வெல் காமிக்ஸ் மற்றும் படங்களின் மிகத் தீவிரமான ரசிகை. தோர் தான் எனக்கு மிகவும் பிடித்த மார்வெல் கதாபாத்திரம். தோர் கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் சரியாக இருக்கும்'' என்றார்.

Google+ Linkedin Youtube