பிரேமலதா அதிமுகவை விமர்சித்ததை மறப்போம், மன்னிப்போம்: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக குறித்து பிரேமலதா சொன்னதை மறப்போம், மன்னிப்போம் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் இன்று (சனிக்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விவரம்:

அதிமுகவை அகில இந்திய தில்லுமுல்லு கழகம் என ஏற்கெனவே விமர்சித்ததில் மாறுபாடு இல்லை என, பிரேமலதா கூறியிருக்கிறாரே?

அதிமுகவை அவர் விமர்சிக்கவில்லை. திமுகவைத் தான் தில்லுமுல்லு கழகம் என்று சொன்னார். நான் சொல்கிறேன், திமுக தில்லுமுல்லு கழகம்.

அதிமுகவின் 37 எம்பிக்களால் பயனில்லை என குற்றம்சாட்டியுள்ளாரே?

37 எம்பிக்கள் இருந்ததால் தான் மேகேதாட்டு விவகாரத்தில் வலுவாக குரல் எழுப்பி, நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். இந்திய வரலாற்றிலேயே அப்படி நடந்ததில்லை. அவர் சொல்வதை முழுமையாக மறுக்கிறோம். கூட்டணியில் பங்கு பெற்றால் தான் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதில்லை. நாங்கள் மாநில உரிமைகளுக்காக பலமுறை போராடியிருக்கிறோம். இந்த விஷயத்தில், பிரேமலதா சொல்வதை மன்னிப்போம், மறப்போம்.

பிரேமலதா பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியிருக்கிறாரே?

யாராக இருந்தாலும் ஒருமையில் பேசுவதை தவிர்த்திருக்கலாம்.

அதிமுகவை விமர்சிக்கும் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் பலவீனமாக இருக்காதா?

எங்கள் கட்சிக்கு என பலம் இருக்கிறது. இது கூட்டணியை பலவீனப்படுத்தாது.தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதா?பேச்சுவார்த்தை நடத்தியாகிவிட்டது. தேமுதிக தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். இரண்டொரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்.

கே.சி.பழனிச்சாமியை கட்சியில் தலைமைச் செயலகத்தில் வைத்து இணைத்ததை திமுக விமர்சித்துள்ளதே?

கோட்டைக்குள் கொசு பறந்தாலும் திமுக புகார் மனு அளிக்கும். அவர்களுடைய வழக்கறிஞர் அணிக்கு வேலை கொடுக்க வேண்டும். கட்சிக் கூட்டம் நடத்தவில்லை. கே.சி.பழனிச்சாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

ஏற்கெனவே அதிமுகவை விமர்சித்த கே.சி.பழனிச்சாமி மீண்டும் இணைந்திருக்கிறாரே?

அதிமுக மிகப்பெரிய சமுத்திரம். அதில், டிடிவி தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் இணையலாம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube