சன் மியூஸிக் அஞ்சனா இப்போது ஜீ தமிழில்!

சன் மியூஸிக்கில் விஜேவாகப் பணியாற்றிவந்த அஞ்சனா, தற்போது ஜீ தமிழில் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார்.

சன் மியூஸிக், சன் டிவி உள்பட சன் நெட்வொர்க்கில் கடந்த 10 ஆண்டுகளாக விஜேவாகப் பணியாற்றியவர் அஞ்சனா. நிறைய சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அத்துடன், நடிகர் சந்திரனைக் காதலித்துக் கரம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், சன் மியூஸிக்கில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மாறியுள்ளார் அஞ்சனா. இதுகுறித்து ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

“விஜேவாக எனது 10 ஆண்டுகள் பயணத்தில், என்னை ஆளாக்கிய சன் நெட்வொர்க்கிற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். திரையிலும், திரைக்கு வெளியிலும் அதுதான் என்னை உறுதியான நபராக உருவாக்கியிருக்கிறது.

நான் எடுத்துக் கொண்ட நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இப்போது ஜீ தமிழில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3’ நிகழ்ச்சியில் நாளை முதல் என்னைக் காணலாம். உங்கள் அனைவரின் அன்பும் அரவணைப்பும் தேவை” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அஞ்சனா.

இந்த மாற்றம் குறித்து அஞ்சனாவின் கணவரும் நடிகருமான சந்திரன், ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள அஞ்சனா, “நீங்கள்தான் எனது எல்லா சந்தேகங்களையும் தீர்த்து, நான் முன்னேறிச் செல்ல உந்துதலாக இருந்தீர்கள்.

மீண்டும் வேலைக்கு திரும்ப முடியுமா? என்று என் மீதே நான் சந்தேகம் கொண்டபோது, உந்துதலாக இருந்தீர்கள். நன்றி. செட்டில் ஆக கொஞ்ச நாள் ஆகும். ஆனாலும் ஒருநாள் என்னால் நீங்கள் பெருமைப்படுவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சனா - சந்திரன் தம்பதிக்கு ருத்ராக்‌ஷ் என்ற குழந்தை உள்ளது.

Google+ Linkedin Youtube