தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ்

தமிழுக்காக கதையில் சிறுமாற்றம், மே-1 வெளியீட்டில் பின்வாங்கல் என 'நேர்கொண்ட பார்வை' படம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அஜித் - வினோத் கூட்டணிக்காகக் கைப்பற்றினார் போனி கபூர்.

இப்படம் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இக்கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இப்படத்தில் தாப்ஸி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். மேலும், மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. தற்போது, அதிலிருந்து பின்வாங்கியுள்ளது படக்குழு.

அதுமட்டுமன்றி, நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளைத்தான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு செய்து வந்தார்கள். இதை எத்தனை நாட்கள் திட்டமிட்டார்களோ, அதற்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே படக்குழு முடித்துவிட்டது.

படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட வேகமாகச் சென்றாலும், 'விஸ்வாசம்' இப்போது வரை வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கிறது. இப்போது வரை சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவது நினைவுக் கூரத்தக்கது. இதனால் மே 1-ம் தேதி வெளியீடு வேண்டாம், கொஞ்சம் தள்ளலாம் என்று ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்துக்கு வரலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

இப்போதைக்கு படப்பிடிப்பு முடித்து, இறுதிகட்டப் பணிகளை முடிக்கலாம். பின்பு, எப்போது வெளியீடு என்று திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார்.

Google+ Linkedin Youtube