6 வருடங்களுக்குப் பிறகு அஜித்துக்குப் பாட்டெழுதும் பா.விஜய்

6 வருடங்களுக்குப் பிறகு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்துக்காகப் பாட்டெழுதுகிறார் பா.விஜய்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் இது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை, எச்.வினோத் இயக்கி வருகிறார்.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில், மூன்று பாடல்களை பா.விஜய் எழுதுகிறார். அதில் ஒரு பாடலை எழுதி முடித்துவிட்டார் பா.விஜய். அந்தப் பாடல் அஜித் - வித்யா பாலன் இடையேயான காதல் பாடலாக  அமைந்துள்ளது.

2013-ம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் பா.விஜய் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்நிலையில், 6 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அஜித்துக்காகப் பாடல்கள் எழுதி வருகிறார் பா.விஜய்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித்.

Google+ Linkedin Youtube