விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவு

விவசாய நிலங்களில் சட்டவிரோதமாகச் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

டாஸ்மாக் கடைகள் உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இதனால், விவசாயப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே அங்குள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை?’ என அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதைத் தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் பார்களிலும் கண்காணிப்புக் கேமராக்களை ஏன் பொருத்தக்கூடாது?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும், தற்போது 110 டாஸ்மாக் கடைகள் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடவேண்டும். இதுதொடர்பான அறிக்கையை வரும் 18-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube