திவாலாகிறது ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம்

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனமான ஏபிஜிஷிப்யார்டு திவாலாகிறது. இந்நிறுவ னத்தை சீரமைப்பது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த லிபர்டி ஹவுஸ் அளித்தபரிந்துரைகளை கடன் அளித்த வங்கிகள் நிராகரித்த நிலையில் திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

திவால் மசோதா நடவடிக்கைகள் பிரிவு 33(2)ன் படி திவால் நடவடிக்கைகளை (ஐபிசி) மேற்கொள்ளுமாறு தேசிய நிறுவனசட்ட தீர்ப்பாயத்துக்கு(என்சிஎல்டி) நிறுவனத்தின் சமரச தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுந்தரேஷ் பட் மனு தாக்கல் செய்துள்ளார்.

திவால் நடவடிக்கைகளுக்கு கடன் அளித்த ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான கூட்டமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் ரூ. 18,245 கோடியாகும். திவால் நடவடிக்கைகளை தொடருமாறு என்சிஎல்டி விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017-ம் ஆண்டிலேயே ஏபிஜி ஷிப்யார்டுஉள்ளிட்ட அதிக கடன் சுமை உள்ள நிறுவனங்களை ரிசர்வ் வங்கி கண்டறிந்து இவற்றை சீரமைக்கவோ அல்லது திவால் நடவடிக்கைகளைத் தொடரவோ கடன் அளித்த வங்கிகளுக்குப் பரிந்துரைத்தது. ஏபிஜி ஷிப்யார்டு மீதான நடவடிக்கைகள் ஏப்ரல் 2018-ல் நிறைவடைந்தன. ஆனால் அப்போது திவால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது இந்தநடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பார்தி டிஃபன்ஸ் அண்ட் இன்ஃபிராஸ்ட்ரக்சர் நிறுவனம் மீது திவால் நடவடிக்கை எடுக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்தது. தற்போது அந்த வரிசையில் இரண்டாவது நிறுவனமாக ஏபிஜி ஷிப்யார்டு உள்ளது.

Google+ Linkedin Youtube