‘ரவுடி’ ரசிகர்களுக்கு விஜய் தேவரகொண்டா அறிவுரை

தன்னுடைய ரசிகர்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவைத் தாண்டி, இந்தியா முழுவதும் இவருக்குப் பல ரசிகர்கள் கிடைத்தனர். தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’யைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸி வாலா’ படங்களும் சூப்பர் ஹிட். இத்தனைக்கும் ரிலீஸாவதற்கு சில தினங்களுக்கு முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது ‘டாக்ஸிவாலா’. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தை வெற்றிபெற வைத்தனர் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள்.

இதனால், தன்னுடைய ரசிகர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அவ்வப்போது அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகிறார்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா பதிவிட்ட ட்வீட்டில், “நீங்கள் ரவுடி என்ற அடைமொழி வைத்திருப்பதைப் பார்த்தாலே, உங்களை என் குடும்பத்தில் ஒருவராக நினைத்துவிடுவேன். என் குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் நான் சொல்வதைப் போல சொல்கிறேன், பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

சில விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். அவை நம் நலனுக்காகத்தான். நானும் அவற்றைப் பின்பற்றுகிறேன். குடும்பமோ, நண்பரோ, கடவுளோ... யார் மீதான அன்பாக இருந்தாலும் பைக்கில் எங்கு வேண்டுமானாலும் காட்டுங்கள். ஆனால், நம்பர் ப்ளேட்டில் நம்பர் மட்டுமே இருக்கட்டும்.

அன்புள்ள உங்கள் ரவுடி தோழர் விஜய் தேவரகொண்டா” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலால் அவர் மீதான அன்பானது அதிகரிக்கிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube