மீ டூ VS நயன்தாரா; ட்வீட்டை நீக்கிய சித்தார்த்: விக்னேஷ் சிவன் பதில்

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு நயன்தாரா என்றுமே குரல் கொடுத்துள்ளார் என்று சித்தார்த் ட்வீட்டுக்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.

நயன்தாரா குறித்த ராதாரவி பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனால், ட்விட்டர் பக்கத்தில் பலரும் ராதாரவிக்கு எதிராக தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து மீ டூ இயக்கம் தொடர்பாக இதே போன்றதொரு கொந்தளிப்பில்லை என்ற ரீதியில் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

''மீ டூ இயக்கத்தைப் பற்றி எனது துறையின் ஒட்டுமொத்தப் பெண்ணினமும் மவுனம் காத்தபோது எனக்கு அதிர்ச்சியே நிலவியது. தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்ப ஒரு சக்தி வாய்ந்த பெண்ணின் கோபத்தால் மட்டுமே இயலும் என்ற உண்மை என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

நீங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தான் அநியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள் என்றால் அது துணிச்சலே அல்ல. பாதுகாப்பற்ற உணர்வால் பலம் பொருந்திய பெண்கள்கூட மீ டூ பற்றி பேசாமல் இருந்தீர்கள் என்றால் நீங்களும் குற்றவாளிகள்தான்.

மீ டூ இயக்கத்தைப் பற்றி ஆணாதிக்க சிந்தனையுடன் பேசியவர்களுக்கு நிகரானவர்தான் நீங்களும். பாலினப் பாகுபாடின்றி ஒவ்வொரு நபரும் பொறுப்பை ஏற்க வேண்டும். குறிப்பாக பெண்களின் மனக்குமுறலுக்கு எதிராக மவுனம் காத்த பெண்கள் இதனைக் கவனிக்க வேண்டும். சில நேரங்களில் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றைக்கூட நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது''.

இவ்வாறு சித்தார்த் தெரிவித்தார்..

சித்தார்த்தின் ட்வீட்டைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''மீ டூ உலகம் முழுவதும் வலிமையான, முக்கியமான இயக்கம். பல துறைகளை, முக்கியமாக பொழுதுபோக்குத் துறையை உலுக்கிய இயக்கம். ஒருவர் சமூக வலைதளத்தில் அமைதியாக இருக்கிறார் என்பதால் அவர் ஒரு பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அர்த்தமல்ல.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு நயன்தாரா என்றுமே குரல் கொடுத்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பான, சவுகரியமான பணிச்சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படையாக தனது திரைப்படங்களில் ஆதரித்துப் பேசியுள்ளார். அதன் தாக்கம் ட்விட்டரை விட அதிகம்.

பல பெண்களுக்கு தார்மீக ஆதரவும், பண உதவியும் செய்துள்ளார். மீ டூ இயக்கத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட பெண்களை தனது படங்களில், தன் நிஜ வாழ்க்கையில் பணியமர்த்தியுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அவர் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு எதிராக அவ்வளவு எளிதாக இழி கருத்துகளை பேசியிருக்கிறார் என்ற பிரச்சினையைக் கொண்டு வரும்போது, அந்தப் பிரச்சினையைப் பார்க்காமல் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

ஒருவர் சமூக வலைதளங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் எப்படி தீர்மானிக்கப்படுகிறார் என்பதைப் பார்ப்பது வருத்தமாக உள்ளது''.

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீ டூ இயக்கம் தொடர்பாக தான் வெளியிட்ட ட்வீட்களை நீக்கிய சித்தார்த், ''எனது முந்தைய ட்வீட்டுகள் நான் என்ன நினைக்கிறேன் என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. அதை தெளிவுபடுத்த இன்னும் நிறைய வார்த்தைகள் தேவைப்படுகின்றன. பெண்களின் மீதுள்ள மரியாதையாலும், பாதிக்கப்பட்டவர்களின் மீதுள்ள மரியாதையாலும் அந்த ட்வீட்டுகளை நீக்குகிறேன். இந்த நிலையில் என்னைப் போன்றவர்களிடமிருந்து குழப்பமான அறிக்கைகள் தேவையற்றது. மீ டூ இயக்கம் அதை விட முக்கியமானது. மன்னிக்கவும்'' என்று தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube