ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்: ஏப்ரல் 10-ம் தேதி தொடக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டது எனவும், அதற்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

இதுவரை படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டது. வருகிற ஏப்ரல் 10-ம் தேதி, மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக்களமாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘பேட்ட’ படத்துக்கு இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

Google+ Linkedin Youtube