ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறைவு: வர்த்தகத் துறை செயலர் அனுப் வாத்வான் தகவல்

இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகையானது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று மத்திய வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வாத்வான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 250 டாலர் அளவுக்குதான் விவசாயிக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மானிய ஒதுக்கீடே மிகவும் பிரச்சினைக்குரியதாக உள்ளது. இதற்குக் காரணம் அவை சரியான வகையில் வகுக்கப்படவில்லை. பிற நாடுகளில் எந்த வகையில் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் அளிக்கப்படுகின்றன என்பதை கவனித்து, அதற்கேற்ற வகையில் நாமும் நமது விவசாயிகளுக்கு அளித்திருந்தால் சர்வதேச அளவில் இந்திய விவசாயிகளுக்கு அளிக்கும் மானியம் பிரச்சினையாகி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உலக வர்த்தக அமைப்பிடம் (டபிள்யூடிஓ) இந்தியா அளிக்கும் மானியம் குறித்து புகார் அளிக்கின்றன. அத்துடன் மிக அதிக அளவில் அளிப்பதாகவும் அவை குறிப்பிடுகின்றன. ஆனால் டபிள்யூடிஓ வகுத்தளித்த விதிமுறைகள்படி 10 சதவீத அளவுக்கும் குறைவாகத்தான் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு அளித்துவரும் ஊக்கத் தொகை குறித்து அமெரிக்கா டபிள்யூடிஓ-வின் சமரச தீர்ப்பாயத்திடம் முறையிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற நாடுகள் தங்களது பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் மானியதொகையை பார்த்தால் நிச்சயம் நமக்கு தலை சுற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அவை மிக அதிகமாக ஒதுக்கீடு செய்கின்றன என்றார்.

வேளாண் துறைக்கு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவை மிகவும் தந்திரமாக மானிய ஒதுக்கீடு செய்கின்றன. இதனால் இது டபிள்யூடிஓ வகுத்த விதிகளுக்குள் வருவதில்லை என்றார் வாத்வான்.

ஐரோப்பிய யூனியனில் ஒரு பசு மாட்டுக்கு அளிக்கப்படும் மானிய உதவியைக் கொண்டு அந்த மாடு உலகம் முழுவதும் உயர் வகுப்பில் இரண்டு முறை விமானப் பயணம் செய்யலாம் என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஒரு விவசாயிக்கு அளிப்பது 250 டாலர் மட்டுமே. ஆனால் மேலை நாடுகள் கோடிக்கணக்கில் அளிக்கின்றன என்றார். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அவை சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் என்றார். இந்த விஷயத்தில் சீனாவில் செயல்படுத்தும் முறையை நாமும் பின்பற்றி பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி மண்டலங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் கோடி ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

கடலோரப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் குறிப்பிட்டார். வேலை வாய்ப்பை உருவாக்கும் எண்ணிக்கை அடிப்படையில் இவற்றுக்கு மானிய உதவி அளிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Google+ Linkedin Youtube