முதல் பார்வை: சூப்பர் டீலக்ஸ்

சமந்தாவும், அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் சம்மதிக்காததால், ஃபஹத் ஃபாசிலுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது. திடீரென ஒருநாள் பழைய காதலனிடம் இருந்து சமந்தாவுக்கு போன். அவன் கஷ்டத்தில் இருப்பதாகச் சொல்ல, அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் சமந்தா, வீட்டுக்கு வரச் சொல்கிறார். வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உடலுறவு நடந்துவிடுகிறது.

சமந்தா இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கும்போது, அவன் இறந்துவிடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல், அவனை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிடுகிறார் சமந்தா. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஃபஹத், ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் பிணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். ஃபஹத்திடம் சமந்தா உண்மையைச் சொல்லி, தான் போலீஸிடம் சரணடைவதாகக் கூறுகிறார். ஆனால், அதை மறுக்கும் ஃபஹத், பிணத்தை எங்காவது டிஸ்போஸ் செய்துவிட்டு, இருவரும் விவாகரத்து பெற்றுவிடலாம் என்கிறார்.

இன்னொரு பக்கம், பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து, பள்ளிக்குச் செல்லாமல் நண்பனின் வீட்டில் ஆபாசப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்கின்றனர். படம் தொடங்கும்போது, படத்தில் இருக்கும் நடிகை அந்தச் சிறுவர்களில் ஒருவனின் அம்மா (ரம்யா கிருஷ்ணன்) என்பது தெரிகிறது. கோபமாகும் அந்தச் சிறுவன், டிவியை உடைத்துவிட்டு வீட்டுக்கு ஓடுகிறான். ரம்யா கிருஷ்ணனைக் கொல்வதற்காக ஸ்க்ரூ ட்ரைவருடன் ஓடும் அவன், படியில் கால் தடுக்கி விழ, அந்த ஸ்க்ரூ ட்ரைவர் அவன் வயிற்றிலேயே குத்திவிடுகிறது.

அவனைக் காப்பாற்ற மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ரம்யா கிருஷ்ணனின் கணவரான மிஷ்கின், ‘கடவுள் பிள்ளையைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லி, அந்தச் சிறுவனை திருச்சபைக்குத் தூக்கிச் சென்றுவிடுவார். மிஷ்கினிடம் இருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் ரம்யா கிருஷ்ணன், அங்கு கட்ட பணமில்லாமல் பரிதவிப்பார். டிவி உடைந்தது தெரிந்தால் அப்பா அடிப்பார் என டிவிக்குச் சொந்தக்காரச் சிறுவன் அழ, எப்படியாவது புது டிவி வாங்கி மாட்டிவிட வேண்டும் என 3 சிறுவர்களும் சம்பவம் செய்யவும் திருடவும் கிளம்புவார்கள்.

மற்றொரு புறம், மனைவியையும் (காயத்ரி) குழந்தையையும் விட்டுவிட்டு ஓடிப்போன மாணிக்கம் (விஜய் சேதுபதி), 7 வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புவதாகத் தகவல் வரும். மாணிக்கத்துக்காகக் குடும்பமே காத்திருக்க, அவனோ திருநங்கையாக (ஷில்பா) மாறியிருப்பதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சியாவார்கள். ஆனால், அவன் குழந்தை மட்டும் அவனிடம் ஒட்டிக் கொள்ளும். தன்னை டெஸ்ட் ட்யூப் பேபி என்று கிண்டல் செய்யும் பள்ளித் தோழர்களிடம், ‘இவர்தான் என் அப்பா’ என்று காண்பிப்பதற்காக விஜய் சேதுபதியை அழைத்துச் செல்வான் குழந்தை. போகிற வழியில் சந்தேகப்பட்டு விஜய் சேதுபதியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போலீஸ்.

அங்கு தன் ஆசைக்கு விஜய் சேதுபதியை இணங்க வைப்பார் சப் இன்ஸ்பெக்டரான பக்ஸ். அந்த வலியைத் தாங்கிக்கொண்டு பள்ளி செல்லும் விஜய் சேதுபதியை, அங்கிருக்கும் எல்லோரும் கிண்டல் செய்வார்கள். இதனால், மனம் வெறுத்துப்போகும் விஜய் சேதுபதி மறுபடியும் மும்பை திரும்புவதற்காக டிக்கெட் புக் செய்வார். அதைப் பார்த்துவிடும் குழந்தை, வீட்டுக்குத் திரும்பும் வழியில் காணாமல் போய்விடும்.

மேற்கண்ட 3 முக்கியக் கதைகளும் ஒரு புள்ளியில் இணைவதுதான் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இந்த உலகத்தில் அனைத்துமே ஒன்றுதான். ஆண், பெண், மண், மரம் யாவும் வேறு வேறில்லை. சரியென்றும் தவறென்றும் எதுவுமில்லை. ஒருவருக்கு நன்மையாக இருக்கும் ஒரு விஷயம், மற்றொருவருக்குத் தீமையாக அமையும் என்ற கருத்தை, மிகச்சரியாக, பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு சொன்ன வகையில் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கெனவே சில படங்களில் சொன்ன கருத்தியல்தான் இது என்றாலும், நவீனத்துவமாகச் சொன்ன உத்தியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

படத்துக்கு மிகப்பெரிய பலம், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. 3 மணி நேரப் படத்தை, பொறுமையுடன், சுவாரசியமாகக் கொண்டுசெல்ல யுவன்தான் மிக முக்கியமான காரணம். நிசப்தமான காட்சிகளில் கூட, எங்கோ இருந்து ஒரு பாடலையோ, சப்தத்தையோ ஒலிக்கவிட்டு, அந்தக் காட்சியின் இயல்புத்தன்மையை உணர்த்துகிறார்.

தியாகராஜன் குமாரராஜா எழுதிய கதைக்கு மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், தியாகராஜன் குமாரராஜா ஆகிய 4 பேரும் சேர்ந்து திரைக்கதை எழுதியுள்ளனர். ஒவ்வொரு காட்சிக்கும் மிகக் கடுமையாக உழைத்து, சின்னச் சின்ன விஷயங்களில் கூட டீட்டெய்ல்ஸ் சேர்த்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, காயத்ரி, மிஷ்கின், பகவதி பெருமாள், விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவன், பள்ளிச் சிறுவர்கள் 5 பேர் தவிர, சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஒருவர் நன்றாக நடித்திருக்கிறார், இன்னொருவர் சிறப்பாக நடிக்கவில்லை என்று யாரையுமே குற்றம் சொல்ல முடியாத அளவுக்குத் தங்கள் கதாபாத்திரங்களின் நிலை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியின் குழந்தையாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அபாரம்.

பி.எஸ்.வினோத், நிரவ் ஷா என இருவரின் ஒளிப்பதிவும் கண்களை உறுத்தாவண்ணம், தெளிவாக இருக்கிறது. கல்லூரிக்கால காதலனுடன் சமந்தா உடலுறவு கொள்ளும் காட்சியில், அந்த வீட்டையே கேமரா ஒருமுறை சுற்றிவரும். ஒரு சுற்று முடியும்போது, அவர்களும் முதல் ரவுண்ட் ஆட்டத்தை முடித்திருப்பர். இப்படிக் கவனிக்கிற வைக்கிற நுணுக்கமான காட்சிகள் படத்தில் ஏராளமாக உள்ளன.

படத்தின் நீளம், கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. மூன்று கதைகளையும், இது கொஞ்சம், அது கொஞ்சம் எனக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்வதால், காட்சிகளுக்கு இடையேயான இடைவெளி காரணமாக சில இடங்களில் சுவாரசியம் குறைந்துவிடுகிறது.

ஒரே நாளில் நடக்கும் கதை என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். அப்படியானால், சப் இன்ஸ்பெக்டரான பகவதி பெருமாள், ஒரே நேரத்தில் சமந்தா - ஃபஹத் ஃபாசிலுடனும், போலீஸ் ஸ்டேஷனில் விஜய் சேதுபதியுடனும் எப்படி இருக்க முடியும்? காலையிலேயே பாஸ்போர்ட் விசாரணையை முடித்துக்கொண்டு போன சப் இன்ஸ்பெக்டர், மறுபடியும் சமந்தா வீட்டுக்கு வருவது ஏன்? ஃபஹத்தையும் சமந்தாவையும் வீடியோ எடுத்துக்கொண்டு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் சப் இன்ஸ்பெக்டரை, அவர்கள் ஒருமுறை கூட கவனிக்கவில்லையா? போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

அதேபோல், கதை நிகழும் காலகட்டம் எது என்பதிலும் தெளிவில்லை. சில காட்சிகளில் பழைய காலகட்டமும், சில காட்சிகளில் புதிய காலகட்டமும் இருப்பதுபோல் தோன்றுகிறது.

கீழ் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்தவர்கள் தங்கள் வீட்டுக்குள் இருக்கும்போதே, ஃபஹத்தும் சமந்தாவும் பிணத்தை அறுக்க முயற்சிப்பது, அப்புறப்படுத்துவது, பட்டப்பகலிலேயே பெட்டுக்குள் இருக்கும் பிணத்தை வெளியே எடுத்து ஜீப்புக்குள் வைப்பது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. அதேபோல் பிணத்தை ஜீப்பில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் கேஷுவலாக இருக்கும் காட்சிகளும் உறுத்துகின்றன.

அதேசமயம், தான் கல்லூரிக்காலக் காதலனிடம் உடலுறவு கொண்டதைக் கணவனிடம் சமந்தா சொல்வதும், அதை ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாக இருந்தாலும், மனைவி சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பிணத்தை டிஸ்போஸ் செய்தபின் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்யும் ஃபஹத்தும், நவீனகால மேல்வர்க்கத்து இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றனர்.

‘ஒருநாள் தாலியைக் கட்டிட்டு தினம் தினம் என் தாலிய அறுக்குறான்’, ‘ஆண்டவன் செருப்பை மாத்திப் படைச்சுட்டான்’, ‘நீ ஆம்பளையாவோ, பொம்பளையாவோ இரு. ஆனா, எங்க கூடவே இரு’, ‘லட்சம் பேரு படம் பார்க்க இருக்கும்போது, நாலு பேரு அதுல நடிக்கவும் இருப்பாங்க’ என்பது போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால், வாழ்க்கையை வாழலாம் என்று புத்தியில் உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறது ‘சூப்பர் டீலக்ஸ்’.

Google+ Linkedin Youtube