பாஜக தொண்டர்கள் முன் பிரதமர் மோடியை ஆதரித்து பேசியதால் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங்கிற்கு நெருக்கடி

உ.பி.யின் அலிகரில் பாஜக தொண்டர்கள் முன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அப்பதவியில் அமர வேண்டும் என ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங்(87) பேசியிருந்தார். மத்திய தேர்தல் ஆணையம் விசாரித்து வரும் வைரலான இந்த பிரச்சனையில் ஆளுநர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

உ.பி.யில் நிலவிய பாஜக ஆட்சிகளில் இரண்டுமுறை அதன் முதல் அமைச்சராக இருந்தவர் கல்யாண்சிங். இவர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த ஊறுதியை மீறித்தான் அயோத்தில் பாபர் மசூதி டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது.

அலிகரை சேர்ந்த கல்யாண்சிங் இடையில் பாஜகவை விட்டு வெளியேறிய தனிக்கட்சி துவக்கி இருந்தார். பிறகு அதையும் கலைத்து விட்டு முலாயம்சிங்கின் சமாஜ்வாதியில் இணைந்திருந்தார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜகவில் இணைந்தார். எனினும், அதில் எந்த பதவியும் வகிக்காமல் இருந்தவருக்கு செப்டம்பர் 4, 2014-ல் ராஜஸ்தானின் ஆளுநர் பதவி கிடைத்தது.

இதனால், பெரும்பாலன் விடுப்பு நாட்களில் கல்யாண்சிங் அலிகர் வந்து தங்குவது வழக்கம். இவரை பாஜகவினர் அவ்வப்போது வந்து சந்தித்து பேசுவதும் உண்டு.

இந்நிலையில், அலிகரில் போட்டியிட அதன் பாஜக எம்பியான சதீஷ் கவுதமிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு கிடைத்து வந்த கல்யாண்சிங்கின் ஆதரவு இந்தமுறை தேர்தலில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், சதீஷின் தேர்தல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து உபி பாஜகவினர் அலிகரில் கல்யாண்சிங் வீட்டின் முன் மார்ச் 23-ல் கூடினர். இவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு பேசிய கல்யண்சிங்கிற்கு சிக்கலாகி உள்ளது.

அங்கு பேசிய கல்யாண்சிங் கூறும்போது, ‘பாஜக தொண்டர்களான நாம் அனைவருமே பாஜக வெற்றிபெற விரும்புகிறோம். நாம் மோடிஜியே மீண்டும் பிரதமராக விரும்புகிறோம்.’ எனத் தெரிவித்தார்.

கல்யாண்சிங்கின் இந்த பேச்சு வீடியோ பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. எந்த கட்சியையும் சாராத ஒரு மாநில ஆளுநர் இவ்வாறு பாஜகவிற்கு ஆதரவாகப் பேசியதை புகாராக மத்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி உண்மையா என விசாரித்துக் கூறவேண்டி தேர்தல் ஆணையம், அலிகர் ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் மீதான அறிக்கை நேற்று ஆணையத்திற்கும் அனுப்பபட்டிருந்தது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறும்போது, ‘கல்யாண்சிங்கின் பேச்சு வீடியோவில் உறுதியாகி உள்ளது. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றாலும் அதிருப்தியை தெரிவிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மீது குடியரசு தலைவர் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.’ எனத் தெரிவித்தனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு இமாச்சலப்பிரதேசத்தின் ஆளுநராக இருந்த குல்சார் அகமது, தன் மகன் போட்டியிட்ட தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தார். இதன் மீதானப் புகாரில் மத்திய தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், குல்சார் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Google+ Linkedin Youtube