கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கல்; மத்திய தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்: ஆர்.எஸ்.பாரதி

தமிழகம் வந்துள்ள தலைமை தேர்தல் ஆணையர்களிடம் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.அமைச்சர்கள் பதுக்கி வைத்துள்ள பணம், கல்வியாளர் வீட்டில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்களான அலோக் லவசா, சுஷீல் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். இவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் உயர்அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் வில்சன், கிரிராஜன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

''இதுவரை 12 புகார்களையும், காவல் அதிகாரிகளின் பட்டியலையும்அளித்துள்ளோம். பலர் ஆளுங்கட்சியின் ஏஜென்டுகளாகச் செயல்படுகிறார்கள் அவர்களைத் தேர்தல் பணியில் அனுமதித்தால் நியாயமான தேர்தலாக நடக்காது என்று தெரிவித்துள்ளோம்.

குறிப்பாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் வழக்கு உள்ளது. அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் காவல்துறை இயங்கினால் நியாயம் கிடைக்காது என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம்.

தபால் வாக்குகளை கடைசி நாளில் வாக்குப்பதிவில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தருவார்கள். ஆனால் தற்போது அதை காவல் அதிகாரிகளிடம், கல்வி அதிகாரிகளிடம் வழங்கி  அந்த தபால் வாக்குகளை செல்லததாக ஆக்கவோ, அல்லது அதை அரசுக்கு ஆதரவாகவோ வாங்குவதற்கான செயல் நடைபெறுகிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம்.

அதேபோன்று அதிமுக மீது என்ன புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை. முதல்வரே ராணுவ வீரர்களின் பெயர் சொல்லி ஓட்டு கேட்கிறார் என்பது குறித்தும் புகார் அளித்துள்ளோம். காது கொடுத்துக் கேட்டுள்ளனர். நடவடிக்கை வரும் என்று நம்புகிறோம்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி சபேசன் என்பவரிடம் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதேபோன்று அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கெங்கே பணத்தை பதுக்கி வைத்துள்ளார். வாய்கிழிய பேசுகிறாரே அமைச்சர் ஜெயக்குமார் அவர் என்னென்ன வேலை செய்கிறார், எங்கெங்கே அவரது பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் சேகரித்து வருகிறோம்.

நிச்சயமாக உங்களுக்குச் சொல்வோம். ஒரு கல்வியாளர் வீட்டில் ரூ.5000 கோடி பதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்து புகார் கொடுத்துள்ளோம். அதன்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம்.

யார் அந்தக் கல்வியாளர் என்பதை இப்போது சொல்ல முடியாது. இப்போது ஊடகங்களில் சொல்லிவிட்டால் அவர் தப்பித்துவிடுவார். அவர்கள் எங்கெங்கே பணம் பதுக்கி வைத்துள்ளார்கள் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை''.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube