தன்பாலின உறவு, கூடா நட்புக்கு கல்லால் அடித்து மரண தண்டனை: புரூனேயில் புதிய அடக்குமுறைச் சட்டங்கள் அறிமுகம்

புரூனேயில் மிகவும் கடினமான ஷரியத் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் உலகம் முழுதும் பலநாடுகளில் ’காட்டுமிராண்டித் தனமானது’ என்று கடும் கண்டனங்களுக்கு ஆளான கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனைகளும் அடங்குகிறது.

தன்பாலின உறவு, கூடா நட்பு அல்லது மாற்றுக்காதல் ஆகியவற்றுக்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனையை அறிமுகம் செய்துள்ளது புருனெய்.

அதே போல் பாலியல் பலாத்காரம், திருட்டு ஆகியவற்றுக்கும் உச்சபட்ச மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முகமது நபியை கேலி செய்வது அவதூறு செய்தால் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் மரண தண்டனை.

சிறு நாட்டில் இவ்வளவு கடினமான சட்டங்களை அதன் ஆட்சியாளர் சுல்தான் ஹசனல் போல்கியா அறிமுகம் செய்துள்ளார். பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு இந்தச் சட்டங்கள் முழுதும் மீண்டும் முழுவீச்சுடன் செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதே போல் திருடர்களுக்கு தண்டனையாக கையை, காலை வாங்குவது என்பதும் தெற்காசிய நாட்டில் தேசிய மட்டத்தில் முதன் முதலில் புருனெயில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடுமையான தண்டனைச் சட்ட நிறைவேற்றங்களில் சவுதி அரேபியாவுடன் இணைந்துள்ளது புருனெய்.

இந்த கொடுமையான தண்டனை அறிவிப்புகள் உலக நாடுகளிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்த ஐநா, இவற்றை ‘கொடூரமானதும், மனிதத்தன்மையற்றதும்’ என்று சாடியுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலர் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாப் ஸ்டார் எல்டன் ஜான்  தலைமையில் புருனெய் நாட்டு விடுதிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த நாட்டில் இஸ்லாமிய கொள்கைகள் வலுவாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று ஆட்சியாளர் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு உடனடியாக வந்து விட்டதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

உலகம் முழுதும் கண்டனங்கள்:

ஷரியத் சட்டங்கள் உலகம் முழுதும் கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது. ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பு மைய உதவி இயக்குநர் பில் ராபர்ட்சன்,  ‘இந்தக் கொடூர சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானது. குற்றங்கள் அல்லாத செயல்களுக்கும் காட்டுமிராண்டித் தனமான ஆதிகால தண்டனைகள்” என்று சாடியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனும், “மனிதத் தன்மையற்ற, கீழ்த்தரமான சட்டங்கள்” என்று சாடியுள்ளது.

இதற்கு முன்பு தன் பாலின உறவு அங்கு தடை செய்யப்பட்டிருந்தாலும் அதிக பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைதான் இருந்தது. ஆனால் தற்போது ஆண்களுக்கு இடையிலான தன்பாலின உறவுகளுக்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனையும் பெண்களுக்கு இடையிலான உறவுகளுக்கு 40 கசையடி மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை.

ஆனால் கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனை என்ற தீர்ப்புக்கு பெரிய அளவில் நிரூபணம், சாட்சியம், ஆதாரம் தேவை இதனால்தான் புருனெய் இவ்வகையில் எந்த வித மரண தண்டனைகளை சில ஆண்டுகளாக அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube