வயநாட்டில் போட்டியிட்டு அமேதி மக்களை ராகுல் இழிவுபடுத்திவிட்டார்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

தேர்தலில் இரண்டாவது தொகுதியாக வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம், அமேதி மக்களை ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2009 மற்றும் 2014 தேர்தல்களிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் 4-வது முறையாக அமேதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

அதேநேரம், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை கல்பாத்தியில் இன்று ராகுல் காந்தி தாக்கல் செய்தார். இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சரும் அமேதி தொகுதி பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி விமர்சித்தார்.

அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த 15 ஆண்டுகளாக அமேதியில் இருந்த நபர் (ராகுல் காந்தி) , இப்போது வேறு தொகுதிக்கு மனு தாக்கல் செய்யச் சென்றுவிட்டார். இதன்மூலம் தனது ஆதரவாளர்களிடம் இருந்து அவர் விலக முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இது அமேதி தொகுதி மக்களை இழிவுபடுத்தும் செயல். அமேதி மக்களுக்குச் செய்யும் துரோகம். அமேதி மக்கள் இதைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

அமேதியில் அவருக்கு ஆதரவு கிடையாது என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்ந்திருக்கின்றனர்'' என்றார் ஸ்மிருதி இரானி.

Google+ Linkedin Youtube