ஓபிஎஸ் போன்று தியானம் செய்து காட்டிய ஸ்டாலின்: பிரச்சாரக் கூட்டத்தில் சிரிப்பலை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் போன்று தியானம் செய்ததால், சிரிப்பலை எழுந்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் மர்மமானது என முதன்முதலில் திமுக சொல்லவில்லை. அதனை முதன்முதலில் கண்டுபிடித்தது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் போதெல்லாம் தான் முதல்வராகக் கூடிய அதிர்ஷ்டம் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும். அந்த வாய்ப்பு அவருக்கு 2 முறை கிடைத்தது. ஜெயலலிதா இறந்த பிறகும் அவர் தான் முதல்வரானார்.

சட்டப்பேரவைக்கு அவர் வந்தபோது அவருடைய பொறுப்புக்கு மரியாதை கொடுத்து வணக்கம் செலுத்தினோம். அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். அத்துடன் அவர் நிறுத்தியிருக்க வேண்டும். எங்களைப் பார்த்து சிரித்து விட்டார். அதனால், அவருக்கு ஆபத்து வந்துவிட்டது.

எப்படி எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து சிரிக்கலாம் என சசிகலாவுக்குக் கோபம் வந்து, அவரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டார். அதன்பின்னர், தான் முதல்வராக வேண்டும் என்று சசிகலா நினைத்தார். ஆனால், அதற்குள் சிறை செல்ல நேர்ந்தது.

இதனால், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தார் சசிகலா. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஓ.பன்னீர்செல்வம், நியாயம் கேட்கப் போகிறேன் என, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். அத்துடன் ஆவியுடனும் பேசினார். அப்போது அவர் தான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் தெரிவித்தார். சிபிஐ விசாரணை கோரினார்.

அதிமுகவுக்காக பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள், கட்சிக்காக உயிரை விட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அந்தத் தொண்டர்களுக்காக, திமுக அட்சி பொறுப்பேற்றதும், ஜெயலலிதா மரணத்திற்குக் காரணமானவர்கள் சிறை செல்வார்கள் என உறுதியளிக்கிறேன். அது தான் இந்த ஸ்டாலினின் முதல் வேலை"

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஓபிஎஸ் தியானம் செய்ததைக் கூறியபோது, ஸ்டாலினும் கண்களை மூடி தியானம் செய்து நடித்துக் காட்டினார். இதனால், அங்கிருந்த தொண்டர்களும், மக்களும் கரகோஷம் எழுப்பி சிரித்தனர்.

Google+ Linkedin Youtube