ஜனநாயகம் மற்றும் தேசபக்தியால் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது: மோடி பெருமிதம்

ஜனநாயகம் மற்றும் தேசபக்தியால் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாஜக தொடங்கிய 39 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ''ஜனநாயகத்தின் பண்பாட்டுக் கூறுகள் மற்றும் தேசபக்தியின் மீதான ஆர்வத்தால் பாஜக இந்த உயரத்தை அடைந்துள்ளது. இந்தியர்களுக்கு உதவ எப்போதும் முன்னிலை வகிக்கும் பாஜக, களத்திலேயே உள்ள கட்சி. நம்முடைய வளர்ச்சித் திட்டங்களால், கட்சியை அனைத்துத் தரப்பு மக்களும் நேசிக்கின்றனர். பரந்துபட்ட இந்தியாவில் இது சாத்தியமாகியுள்ளது.

பாஜக தொண்டர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் கட்சிக்காக இரவு, பகலாக உழைப்பர் என்று நம்புகிறேன். இதன்மூலம் இந்திய மக்களால் நம் கட்சியும் கூட்டணிகளும் ஆசிபெறும். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமானவற்றைச் செய்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் நிறையவற்றை நாட்டுக்காக செய்ய ஆசைப்படுகிறோம்'' என்று மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் நிறுவன நாளை (ஏப்ரல் 6)  முன்னிட்டு தன் வலைப்பதிவில், ''ஜனநாயகம் ஜனநாயக மரபுகளை கட்சிக்குள்ளும், பரந்துபட்ட தேசிய மட்டத்திலும் பாதுகாப்பது என்பது பாஜகவின் பெருமைக்குரிய அடையாளமாகும்.

இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம்  பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு, கருத்து சுதந்திரம் ஆகும். பாஜக தொடங்கியது முதல் நம்முடன் அரசியல் ரீதியாக உடன்படாதவர்களை நாம் விரோதிகளாகப் பார்த்ததில்லை'' என்று அண்மையில் கூறியிருந்தார்.

ஜன சங்கத்தின்  முன்னாள் தலைவர்களால்1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. ஜன சங்கம், 1977-ல் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இவை அனைத்துமே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube