கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாகப் பேசியிருந்தால் தவறுதான்:ஸ்டாலின்

கிருஷ்ணரைப் கி.வீரமணி பற்றி சர்ச்சையாகப் பேசியிருந்தால் தவறுதான் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். அப்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணரைப் பற்றி அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், "கி.வீரமணி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சு அல்ல அது. திராவிடர் கழகத் தலைமை அலுவலகமான பெரியார் திடலில் பேசியது. அதுவும் கிருஷ்ணரைக் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசவில்லை. சில உதாரணங்களுடன் பேசியிருக்கிறார். அதனை, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும், சில ஊடகங்களும் தவறான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல செய்திருக்கும் சதி இது.

அது உண்மை இல்லை. அப்படி, உண்மையாக இருந்திருந்தால் அது தவறுதான் என்பது என்னுடைய கருத்து. 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்பது தான் அண்ணாவின் கொள்கை. தலைவர் கருணாநிதியும் 'பராசக்தி' திரைப்படத்தில், 'கோயில் கூடாது என்பது அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது' என்பது தான் திமுகவின் கொள்கை என தெளிவாக சொல்லியிருக்கிறார். அதே கொள்கையில் தான் திமுக இன்றைக்கும் இருக்கிறது.

திமுகவில் 90% இந்துக்கள் தான் இருக்கின்றனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், என் மனைவியும் தினமும் காலையிலும், மாலையிலும் இடைவிடாமல் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுபவர் தான். ஆனால், அவரிடம் கோயிலுக்குப் போவது தவறு என நான் சொன்னது கிடையாது. இது வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்படுகின்ற பிரச்சாரம்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Google+ Linkedin Youtube