சில பந்துகளை கவனமாகப் பார்ப்போம் என்றார் தினேஷ் கார்த்திக்; ஆனால் நான் அதிகம் யோசிக்கவில்லை: காட்டடி பற்றி ரஸல்

ஆர்சிபி அணிக்கு எதிராக திகைப்பூட்டும் கடைசி கட்ட அதிரடியைக் காட்டிய ரஸல் 13 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 48 ரன்களைக் கேட்டுக் கேட்டு அடித்தது ஆர்சிபி அணிக்கு 5வது தொடர் தோல்வியைப் பெற்றுத் தந்தது.

3 ஓவர்களில் 53 ரன்கள் என்பது ரஸல் காட்டடியில் 2 ஓவர்களிலேயே முடிந்து விட்டது. இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஸல் கூறியதாவது:

எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நான் பேட் செய்ய இறங்கிய போது தினேஷ் கார்த்திக் என்னிடம் நாம் சில பந்துகளை கொஞ்சம் வாட்ச் செய்வோம் என்றார். ஆனால் அதிகம் சிந்திக்கவில்லை.  28 பந்துகளில் 68 ரன்கள் அடிக்க வேண்டும். எல்லா நாட்களிலும் இது நிகழ்ந்து விடாது.

பந்து வரும் திசையில் நம் உடல் இருக்க வேண்டும். இதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு. ஒரு ஓவர் போதும் ஆட்டத்தை மாற்ற. அதனால்தன இது முடியாது என்று நான் ஒரு போதும் விட்டுவிடுவதில்லை.

களத்தில் நான் இருக்கிறேன் என்றால் எதுவும் சாத்தியம். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானங்களிலும் ஸ்டாண்ட்ஸுக்கு பந்தை அடித்து என்னை நானே ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

தாழ்வான ஃபுல்டாஸ்களை அடிப்பது கடினம். கண்-கை ஒருங்கிணைவுதான் அனைத்தும். தாழ்வான ஃபுல்டாஸ்களுக்கு நாம் நம் முழு கையையும் கொண்டு செல்ல முடியாது கையை கொஞ்சம் மடக்கிக் கொண்டுதான் விளாச முடியும். நான் விவரிக்க முடியாது, களத்தில் காட்டத்தான் முடியும். நான் ஸ்பெஷல் என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் அதனை பெரிதாகக் காட்டிக் கொள்வதில்லை.

இவ்வாறு கூறினார் ஆந்த்ரே ரஸல்.

Google+ Linkedin Youtube