வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக வெளியேறும் நேரம் வந்துள்ளது: மாயாவதி பேச்சு

வெறுப்பு அரசியலை வளர்த்த பாஜக, ஆட்சியை விட்டு வெளியேறும் நாள் வந்துவிட்டது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

மக்களைவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி பல்வேறு மாநிலங்களில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தியோபந்த்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:

நாட்டின் காவலாளி கோ‌ஷத்தை பாஜக கையில் எடுத்து உள்ளது. ஆனால் இது வெற்று கோ‌ஷம். இதனால் எந்த பயனும் ஏற்படாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பாஜக அவசர, அவசரமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏழைகள் மீது உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இல்லை. அவ்வாறு அவர்களுக்கு அக்கறை இருந்தால் முன்பே நலத்திட்டங்களை அறிவித்து தொடங்கி இருக்க வேண்டியது தானே.

கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் ஏதும் செய்யவில்லை. ஆனால் இனிமேல் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்யப்போவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். மோடிக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. அக்கட்சி ஆட்சியை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கடனில் தத்தளிக்க விட மாட்டோம். அவர்களின் கடனை அடைப்போம். கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை உரியமுறையில் செலுத்துவோம்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவதாக கூறும் திட்டத்தால் நாட்டில் வறுமை ஒழிந்து விடாது. காங்கிரஸூம் மக்களை ஏமாற்றும் வேலையையே செய்கிறது.

வெறுப்பு அரசியலால் பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டது. உத்தர பிரதேசத்தில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு மாயாவதி பேசினார்.

Google+ Linkedin Youtube