ஜெட் ஏர்வேஸ் விற்பனை: மாற்று திட்டம் தயாராகிறது

நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனத்தை ஏற்று நடத்த புதிய நிர்வாகக் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனத்தை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வராதபட்சத்தில் அதற்கான மாற்றுத் திட்டத்தையும் உருவாக்கி வருகின்றனர்.

இத்திட்டத்தை பங்குகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனமான டிபிஜி, இன்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் அரசு சார்ந்த தேசிய முதலீட்டு மற்றும் கட்டமைப்பு நிதியம் (என்ஐஐஎப்) ஆகியன ஒன்றிணைந்து நிறுவனத்தை ஏற்று நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. வங்கி குழுவானது டெல்டா ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனமான கேஎல்எம் ஆகிய நிறுவனங்களும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்த விருப்பம் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.

இது தவிர, தனியார் முதலீட்டு நிதிய நிறுவனமான பிளாக்ஸ்டோன் நிறுவனத்திடம் ஜெட் நிறுவனத்தின் லாயல்டி திட்டம் குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ஜெட் ஏர்வேஸ் செயல்பாடுகள் ஸ்திரமடைந்த பிறகு இந்தத் திட்டம் மூலம் நிதி திரட்ட முடியுமா என்பதை பிளாக்ஸ்டோன் ஆராயும்.

அடுத்த 6 மாதங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையே கடன் வழங்கிய வங்கிகள் விரும்புகின்றன. அதற்கேற்ப தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான முதலீடுகள் கிடைக்கச் செய்வது. இத்துறை வல்லுநர்களை இயக்குநர் குழுவில் இடம்பெறச் செய்வது. கால வரையறையுடன் கூடிய லாப பாதைக்கு திருப்பும் உத்தியை வகுப்பது ஆகியன இதில் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நடத்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து மனுக்களை எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு பெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 6 முதல் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிபிஜி தலைமையிலான குழு ஜெட் ஏர்வேஸை நடத்துவதற்கான விருப்ப நிபந்தனைகளை ஆராய்ந்து வருகிறது.

Google+ Linkedin Youtube