தயாராகும் பிரம்மாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்; 50 நாட்கள் படப்பிடிப்பு: 'தளபதி 63' அப்டேட்ஸ்

விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியம் அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்றபோது, சென்னையில் நடத்தினால் மட்டுமே இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்தியது படக்குழு.

இதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.  கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய கதை என்பதால், இதற்காக சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் அமைத்து வருகிறது படக்குழு.

இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த அரங்கில் தான் அடுத்த 50 நாட்களுக்கான படப்பிடிப்பு நடத்தவுள்ளது படக்குழு. கால்பந்தாட்டம் ஆட வேண்டும் என்பதால், இக்காட்சிகளின் படப்பிடிப்புக்காக பிரத்யேகமாகத் தயாராகி வருகிறார் விஜய். இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி படக்குழு நீக்கிவிட்டது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ரூபன் எடிட் செய்ய, கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார். சண்டை இயக்குநராக அனல் அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube