ஆபத்தான மானை வளர்த்த ஆஸ்திரேலியர்: கொம்பால் குத்தப்பட்டு பரிதாப மரணம்

ஆபத்தான சிவப்பு வகை மான் இனத்தை வீட்டில் வளர்த்த ஆஸ்திரேலியர், அதே மான் தனது கொம்பால் குத்திக் கிழித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புதன்கிழமை காலை நடந்துள்ளது.

விக்டோரியாவின் வான்கரட்டா பகுதியைச் சேர்ந்தவர் பெளல் மெக்டொனால்ட். 47 வயதான இவர் கடந்த 6 ஆண்டுகளாக சிவப்பின மான் வகையை வளர்த்து வந்தார். இவ்வின மான்கள் ராட்சதக் கொம்புகளைக் கொண்டவை. மூர்க்கமாக நடந்துகொள்பவை.

இந்நிலையில் புதன்கிழமை அன்று மெக்டொனால்ட் மானுக்கு உணவளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. உணவு அளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மான், தனது கொம்பால் மெக்டொனால்டைத் தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர், பயங்கரமாக அலறினார். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அவரின் மனைவி, மெக்டொனால்டைக் காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும் வீட்டில் இருந்து ஓடிவந்த மகன், தாயைக் காப்பாற்றினார்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் மெக்டொனால்ட் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரின் மனைவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக உலகிலேயே ஆபத்தான பறவையான கசோவாரியை வளர்த்த நபர் ஒருவர் அந்தப் பறவையாலேயே தாக்கப்பட்டு அமெரிக்காவில் பலியானது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube