ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை

புதன் இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது விமானச்சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு ரீஃபண்ட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பில்லை என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

“பயணிகள் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரீஃபண்ட் தொகையை திரும்பப் பெற ஜெட் ஏர்வேஸ் அதனை நடைமுறைப் படுத்த வேண்டியது அவசியம். இது உடனடியாகச் சாத்தியமில்லை, விமான சேவை நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற்றால்தான் உண்டு” என்று விமான சேவைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நேற்று சேவை முழுதும் நிறுத்தப்படும் வரை ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கான பயணிகள் டிக்கெட்டுகளுக்கான தொகை திரும்ப பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகள் ரூ.400 கோடி தொகையை உடனடியாக ரிலீஸ் செய்யுமாறு பிரதமர் அலுவலகம், வான்வழித்துறை, நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் எழுதிக்கேட்டது. அதாவது ரூ.400 கோடியை ரிலீஸ் செய்தால்தான் பயணிகளுக்கு ரீஃபண்ட் அளிக்க முடியும் என்று தன் கடிதத்தில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து சிவில் ஏவியேஷன் அமைச்சகம் தன் ட்வீட்டில், “ரீஃபண்ட், டிக்கெட் கேன்சல்கள், மாற்று புக்கிங் விதிமுறைகளை கவனமாகப் பரிசீலித்து வருகிறோம். இவை ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்று நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால் நிறுவனத்திடம் நிதியில்லை எனும்போது அரசு எப்படி ரீஃபண்ட் உத்தரவாதம் அளிக்க முடியும் என்பது தெரியவில்லை.

ட்ராவல் ஏஜெண்ட்கள் தங்கள் தொகையினை ஐஏடிஏ சிஸ்டம் மூலம் திரும்பப் பெற முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட விமான சேவை நிறுவனத்திடம் பெற வேண்டிய ரீஃபண்ட் தொகை அந்த நாள் ஒட்டுமொத்த புக்கிங் தொகையை விட அதிகமாக இருந்தால் சிஸ்டம் ரீஃபண்டை நிறுத்தி விடும், இதனால் ட்ராவல் ஏஜென்சிகளும் பயணிகளுக்கு திரும்ப அளிக்க முடியாது.

ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு இது தொடர்பாக ஒப்பந்தப்புள்ளிகள் நடைமுறைகளை முடிக்கும் வரை ஜெட் ஏர்வேஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

Google+ Linkedin Youtube