‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கும் சாம் சி.எஸ்.

மாதவன் இயக்கி, நடிக்கும் ‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ படத்துக்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ்.

1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார்.இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று  சமீபத்தில் விடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’ என்ற படம் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும்  இந்தி என 4 மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது.

இதில், நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஆனந்த் மகாதேவன் விலகிவிட, மாதவனே படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் டீஸர் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க சாம் சி.எஸ். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ட்விட்டரில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“ராக்கெட்ரி போன்ற ஒரு படத்துக்கு இசையமைப்பேன் என நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் பணியாற்ற உண்மையாகவே ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

இந்தக் காவியத்தில் என்னையும் ஒரு பகுதியாக்கிய மாதவனுக்கு மிகப்பெரிய நன்றி” என தெரிவித்துள்ளார் சாம் சி.எஸ்.

Google+ Linkedin Youtube