செங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

நெல்லை, 

செங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தமிழ் ஆசிரியர் 

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தெற்கு மேடு அங்கன்காலடியை சேர்ந்தவர் முருகையா (வயது 48). இவர் செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவருடைய தங்கையை, அதே ஊரை சேர்ந்தவரும், சென்னை புழல் ஜெயிலில் ஜெயிலராக உள்ள வேல்சாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். திருமணத்துக்கு பிறகு வேல்சாமி தனது அண்ணன் காளி (55) வீட்டுக்கு செல்லாமல் மைத்துனர் முருகையா வீட்டுக்கு மட்டுமே சென்று வந்துள்ளார். இது தொடர்பாக காளிக்கும், முருகையாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் கடந்த 5–12–2013 அன்று காளி, முருகையா வீட்டுக்கு சென்றார். அங்கு முருகையா இல்லாததால், அவருடைய தாயார் மாடத்தி அம்மாளிடம், நீயும் உன்மகன் முருகையாவும் சேர்ந்து எனது தம்பியை என் வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கிறீர்கள் என்று கூறி திட்டி விட்டு சென்று விட்டார். இதை அறிந்த முருகையா அன்று இரவு 9 மணிக்கு காளி வீட்டுக்கு சென்றார். இதில் ஆத்திரம் அடைந்த காளி அரிவாளை எடுத்து முருகையாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆயுள் தண்டனை 

இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் காளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து காளியை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜரானார்.

Google+LinkedinYoutube