தி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு

சென்னை,

தமிழகத்தில் வேலூர் தவிர்த்து நடந்து முடிந்த 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.  தி.மு.க. கூட்டணி கட்சிகள் (விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியை தவிர), அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் யார் யாரை நியமிப்பது என்பது பற்றி அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  இதற்காக டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ராசா உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர்.  இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின் முடிவில், தி.மு.க. மக்களவை குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  தி.மு.க. மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று தி.மு.க. மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில், மக்களே எஜமானர்கள்.  மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Google+ Linkedin Youtube