கற்பழிப்பு வழக்கு; பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய்க்கு ஜாமீன்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் கரண் ஓபராய்.  இவர் மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறினார்.  இதனை தொடர்ந்து மும்பை போலீசார் கடந்த மே 6ந்தேதி ஓபராயை கைது செய்தனர்.  அவர் மீது 376, 384 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.  திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பெண்ணை ஓபராய் கற்பழித்து உள்ளார் என எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்து, அந்த பெண்ணின் சம்மதம் பெற்று உடல் சார்ந்த உறவு கொண்டுள்ளார்.  அதனால் இது கற்பழிப்புக்கு நிகராகும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை சுட்டி காட்டி பாதிப்படைந்த பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி காசிப் கான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

எப்.ஐ.ஆரில், பெண்ணை ஓபராய் கற்பழித்ததுடன், அதனை படம்பிடித்து கொண்டு பணம் தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார்.  கேட்ட பணம் தரவில்லையெனில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுமுள்ளார் என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அந்தேரி நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.  கடந்த மே 17ந்தேதி ஓபராயின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.  இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேவதி மொஹித் தெரே அவருக்கு ரூ.50 ஆயிரம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube