வர்த்தக ரீதியாக இப்போதைக்கு இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை -அமெரிக்கா

வாஷிங்டன்

சீனாவுக்கு எதிராக மேற்கொண்டதைப் போல இந்தியாவுக்கு எதிராகவும் அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்தியாவுக்கு எதிராக இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ், கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க வர்த்தகத்துறை அலுவலகம் சீனாவுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது.

வர்த்தக ஒப்பந்தம் மீறப்படுகிறதா, அமெரிக்க வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறதா என விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்தே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் மூண்டு இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிப்பை அதிகப்படுத்தின.

இதே காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியத்திற்கும் அமெரிக்கா வரிகளை விதித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்புகள் உள்ளிட்ட 29 பொருட்கள் மீதான வரி விதிப்பை அதிகரிக்க இந்தியா கடந்த ஆண்டு ஜூனில் முடிவு செய்தது.

இருப்பினும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்ததால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், 29 அமெரிக்க பொருட்கள் மீதான வரி உயர்வை நாளை முதல் அமல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியப் பொருட்கள் வரி விலக்கு பெற உதவிய, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்ததால், இந்தியா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவுக்கு எதிராக 301-வது பிரிவின் கீழ் அமெரிக்க வர்த்தகத் துறை விசாரணை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்திய சந்தையை சமமாகவும் நியாயமாகவும் அணுக அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியே, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா பறித்த நிலையில், இதே காரணங்களுக்காக 301-வது பிரிவின் கீழும் விசாரணை நடத்தக்கூடும் என கூறப்பட்டது.

ஆனால் வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிராக இப்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அமெரிக்க வர்த்தகத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது, இந்திய சந்தையை அணுகுவதில் இடையூறுகள் இருக்கின்றன என்ற அதிருப்தியை தொடர்ந்து இந்தியாவிடம் தெரிவித்து வருவதாகவும் அமெரிக்க வர்த்தகத்துறை அலுவலகம் கூறியுள்ளது.

Google+ Linkedin Youtube