உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா 334 ரன்கள் விளாசல் - ஆரோன் பிஞ்ச் அபாரம்

லண்டன், 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 20-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் டேவிட் வார்னர் 26 ரன்னில் போல்ட் ஆக, அவரை தொடர்ந்து  உஸ்மான் கவாஜா 10 ரன்னில் கேட்ச் ஆனார். 

பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் சுமித், ஆரோன் பிஞ்ச்சுடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் மள மளவென உயர்ந்தது. தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி  சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஆரோன் பிஞ்ச் சதம் விளாசினார்.  தொடர்ந்து அபாரமாக ஆடிய  ஆரோன் பிஞ்ச் 132 பந்துகளில் 153 ரன்கள் குவித்தநிலையில் இசுரு உதனா பந்தில் கேட்ச் ஆனார். அவரை தொடர்ந்து தனது அரைசதத்தை பதிவு செய்த ஸ்டீவன் சுமித் 73 ரன்களில் போல்ட் ஆனார். 

அதற்கு பின் ஷான் மார்ஷ் 3 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 4 ரன்னிலும், கம்மின்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட  50  ஓவர்கள் முடிவில்  7  விக்கெட்களை இழந்து 334 ரன்களை எடுத்துள்ளது. இறுதியில்,  அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்  46 ரன்களுடனும்,  மிட்செல் ஸ்டார்க்  5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.  

இலங்கை அணியில் இசுரு உதனா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா தலா 2 விக்கெட்களும், மலிங்கா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.


Google+ Linkedin Youtube