பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புவித்தட்டுகள் ஒன்று சேருகிற இடத்தில் இருப்பதால் அடிக்கடி அங்கு நில நடுக்கம் நேரிடுகிறது.

அங்கு கடந்த 4–ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சமையல் கியாஸ் குழாய்கள் உடைந்து தீ விபத்துகள் நேரிட்டன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 8 மணிக்கு அங்கு மீண்டும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்ஜ்கிரெஸ்ட் நகர் அருகே மையம் கொண்டிருந்தது.

இந்த நில நடுக்கத்தால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள் என கட்டிடங்களில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நில நடுக்கம் கலிபோர்னியாவில் மட்டுமின்றி அண்டை மாநிலமான நெவேடாவின் லாஸ் வேகாஸ் நகரிலும், மெக்சிகோ எல்லைப்பகுதியிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நில நடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் கியாஸ் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிந்து தீவிபத்துகள் நேரிட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டன. சாலைகள், பாலங்கள் பழுதுபட்டன.

அதே நேரத்தில் உயிரிழப்போ, யாருக்கும் படுகாயமோ ஏற்படவில்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை கூறியது.

இருப்பினும் இந்த நில நடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நில நடுக்கம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நில நடுக்கத்தின் சேத விவரம் முழுமையாக தெரியவரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நில நடுக்கம் தொடரலாம் என நில நடுக்கவியல் நிபுணர் டாக்டர் லூசி ஜோன்ஸ் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். ஏற்கனவே நில நடுக்கத்தால் குலை நடுங்கிப்போய் உள்ள மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நில நடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் சாலையோர ஓட்டல் (மோட்டல்) நடத்தி வரும் இந்திய வம்சாவளிப்பெண் பிங்கி, சி.என்.என். நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘ நான் ஓட்டலில் முன்புற மேஜையில் அமர்ந்து இருந்தேன். முதலில் லேசான அதிர்வை உணர்ந்தேன். உடனே வெளியே வந்தேன். திரும்ப உள்ளே வந்தேன். அதன்பின்னர்தான் கட்டிடமே குலுங்கும் அளவு நில நடுக்கம் ஏற்பட்டது. கூரை இடிந்து விழுந்து விடும் என பயந்தேன். இப்படி ஒரு நில நடுக்கத்தை நான் சந்தித்தது இதுவே முதல் முறை. ஓட்டல் இடிந்து விழுந்து விடும் என கருதி அனைவரும் வெளியே சாலைக்கு ஓடி வந்து விட்டோம். நான் அழத்தொடங்கி விட்டேன். நாம் உயிர் பிழைப்போமா, உயிர் பிழைக்க மாட்டோமோ என்பது எனக்கு தெரியவில்லை. நாங்களும், ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்களும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டோம்’’ என உருக்கமுடன் கூறினார்.

Google+ Linkedin Youtube