ராகுல் பற்றி விமர்சனம்; காங்கிரசார் போராட்டம் : சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குப்பதிவு

சென்னை,

பஞ்சாபில் போலீசார் உட்பட அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பணியில் நியமிக்கப்பட்டதிலிருந்து அவ்வப்போது போதைப்பொருள் சோதனை கட்டாயம் என அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல், பஞ்சாப் மக்களை போதைப்பொருள் அடிமைகள் என கூறும் தலைவர்கள் தான் முதலில் போதைப்பொருள் சோதனைக்கு செல்ல வேண்டும் என விமர்சித்தார்.

இந்நிலையில் ஹர்சிம்ராத் கவுர் பாதலின் கருத்து குறித்து பேசிய சுப்பிரமணிய சுவாமி, அவர் ராகுல் காந்தியை மனதில் வைத்து தான் அவ்வாறு கூறியிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ராகுல்,  கொக்கைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் பஞ்சாப் அரசு கூறியுள்ள போதைப்பொருள் சோதனையில் நிச்சயம் தோல்வி அடைவார் எனவும் கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சுப்பிரமணிய சுவாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சுப்பிரமணிய சுவாமி மீது ராகுல் குறித்து அவதூறு பரப்பியதாக காங்கிரஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சுவாமியை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் இன்று போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுப்பிரமணிய சுவாமியின் உருவ பொம்மையை ‘பாடை’ கட்டி தூக்கி வந்தனர்.

அதை எரிக்க முயன்ற போது போலீசார் பிடுங்கி சென்றனர். இதையடுத்து சுப்பிரமணிய சுவாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். அவரை கைது செய்ய வேண்டும். சுப்பிரமணிய சுவாமி தமிழ்நாட்டிற்குள் எங்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கண்டித்து கோ‌ஷம் போட்டனர். பின்னர் தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம், எஸ்.சி.துறை நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், புத்தநேசன், கிஷோர்குமார், சாந்தி, அய்யப்பன், இமயம் கக்கன், மனோகர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube