இருளில் மூழ்கிய நியூயார்க் நகரம் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு

நியூயார்க்,

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மர் ஒன்று வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மின்தடையால், வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என 73 ஆயிரம் கட்டடங்கள் இருளில் மூழ்கின. நகரவீதிகளில் இருள் கவ்வியதால், வாகன போக்குவரத்தும் தடைபட்டது. 

மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக சுரங்க பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் பலர் இரவில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். 

மின்தடை ஏற்பட்ட போது நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற Carnegie ஹாலில் கச்சேரி நடத்திக்கொண்டு இருந்த குழுவினர் வெளியே வந்து பொது மக்கள் மத்தியில் கச்சேரியை தொடர்ந்தனர். மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து தான் மின் தடைக்கு காரணம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். 

விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் சிறிது நேரத்திற்குள் மின் தடையை சரி செய்தனர். மின்சாரம் வந்தவுடன் மக்கள் வீதிக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

கடந்த ஆயிரத்து 970ஆம் ஆண்டு நியூயார்க்கில் 25 மணி நேர மின் தடை ஏற்பட்டது. அந்த சம்பவம் நடைபெற்று சரியாக 42 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மீண்டும் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube