ஜம்மு காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு ஆதரவான பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டி மாநிலங்களவையில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத்  பேசியிருந்தார். அவருடைய பேச்சு அடங்கிய செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் பதிவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தியாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்ட  பேனர்களால் அந்நாட்டில் சர்ச்சையாக வெடித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் ராவத் மாநிலங்களவையில் பேசுகையில், அகண்ட பாரதத்தை ஏற்படுத்தும் கனவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளோம். இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை மீட்டதை போன்று, பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தானை இந்தியா மீட்கும் என குறிப்பிட்டு இருந்தார். இதனை ஆதரிக்கும் வகையில் இஸ்லாமாபாத் நகரில் சாலைக்கு நடுவே பேனர்கள்  வைக்கப்பட்டது. பொதுவாக இஸ்லாமாபாத் நகரில் பேனர்களை வைக்க அனுமதியை வாங்க வேண்டும். ஆனால் இந்த பேனர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.

பாகிஸ்தானின் உளவுத்துறை தலைமையகம், பல்வேறு நாடுகளின் தூதரகங்களை ஒட்டிய இடத்திலேயே இந்த பேனர்கள் ஐந்து மணிநேரத்துக்கு மேலாக இருந்துள்ளது. பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட காலதாமத்திற்கு பின்னர் பேனர் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Google+ Linkedin Youtube