தல காய்ச்சல் : அஜித் படம் பார்க்க, விடுமுறை கேட்ட நடிகர்

சென்னை

அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஹெச். வினோத்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் நேற்று நடந்தது. மேலும் செய்தியாளர்களுக்காக படத்தை பிரத்யேகமாக நேற்று திரையிட்டார்கள். பிங்க் படம் போன்று இல்லாமல் நேர்கொண்ட பார்வையில் அஜித் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வினோத் தெரிவித்திருந்தார். அந்த மாற்றங்கள் இரண்டே இரண்டு தான். மற்றபடி பிங்க் படத்தை அப்படியே அழகாக ரீமேக் செய்துள்ளார் வினோத்.

மெட்ரோ , ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட படங்களில்  கதாநாயகனாக  நடித்தவர் சிரிஷ் சரவணன், இவர் தற்போது தான் நடித்துவரும் படங்களின் தயாரிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வைத்துள்ளார். அதில், தமக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாவதால், தமக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள், நடிகர் சிரிஷ் சரவணனுக்கு தயாரிப்பாளர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google+ Linkedin Youtube