பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

ஹூஸ்டன்,

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அவர் இன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அவர்கள் முன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதனிடையே, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சென்றடைந்த பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதன்பின்பு அவரை ஹூஸ்டன் நகரில் உள்ள ஆற்றல் துறை தலைமை செயல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் வரவேற்றனர்.  அவர்களுடன் பிரதமர் மோடி வட்ட மேஜை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார்.  பின்பு அவர்களுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இதன்பின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை சீக்கிய சமூகத்தினர் வரவேற்றனர்.  கர்த்தார்பூர் வழித்தடம் திறப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட சீக்கிய சமூகத்தினருக்கான பணிகளுக்காக பிரதமர் மோடிக்கு அவர்கள் நினைவு பரிசு வழங்கி தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இதேபோன்று, போரா சமூக உறுப்பினர்கள் பிரதமர் மோடியை ஹூஸ்டன் நகரில் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.  தொடர்ந்து காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் அடங்கிய குழுவினரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.  அவர்களில் ஒருவர் பிரதமர் மோடியின் கைகளுக்கு முத்தமிட்டபடி, 7 லட்ச காஷ்மீரி பண்டிட்டுகளின் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என கூறினார்.

Google+ Linkedin Youtube