இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 385 ரன்கள் குவிப்பு

விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 136 ஓவர்களில் 502 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா176 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்திலேயே தடுமாறியது. அஷ்வின் மற்றும் ஜடேஜா சுழலை சமாளிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடும் சிரமப்பட்டனர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில்  தொடக்க வீரர் டீன் எல்கர் சிறப்பாக ஆடி சதம் விளாசினார். டீன் எல்கர் 160 ரன்களில் கேட்ச் ஆனார். மேலும் சதம் அடித்த குயின்டான் டி காக் 111 ரன்களும், அரைசதம் அடித்த பாப் டு பிளிஸ்சிஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். செனுரன் முத்துசாமி 12 ரன்னுடனும், கேஷவ் மகராஜ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். தற்போது தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியை விட 117 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Google+ Linkedin Youtube