பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு இந்திய தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி,

2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார்.  மற்ற இருவர் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆவர்.  "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக" இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் அபிஜித் பானர்ஜி மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஆவார்.  அவருக்கு இந்திய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

உலகளவில் வறுமையை எதிர்கொள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆய்வு உதவும் என பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்புக்கு தனது பங்கை வழங்கியதற்காக அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும்பொழுது, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கும் வாழ்த்துகள்.  வறுமை ஒழிப்பு குறித்த உங்களின் ஆய்வுகள் புதிய பாதையை உருவாக்க உதவும் என தெரிவித்து உள்ளார்.

வறுமையை அழித்து இந்திய பொருளாதாரம் மேம்படும் ஆற்றலை கொண்ட நியாய் திட்டத்திற்கு உருகொடுத்தவர் அவர் என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி, அவரது மனைவிக்கு வாழ்த்துகள்.  தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் இருவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்து கொண்டுள்ளார்.

கல்வி, சுகாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க உங்களது கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தில் தெரிவித்து உள்ளார்.

Google+ Linkedin Youtube