சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா? பாரதிராஜா கண்டனம்

டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சமீப காலத்தில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’. பெண்களின் கொடுந்துயர் ஒன்றினை அழுத்தமாக சொல்லியிருந்தார். சமூகத்துக்கு தேவையான இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் பெருமக்கள், காவல்துறை அதிகாரிகள் பலர் நெகிழ்ந்து பாராட்டினர்.இந்த படம் திரைக்கு வருவதையொட்டி ரூ.85 லட்சத்துக்கும் மேலாக விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. ஆனால் படம் வெளியாகும் முதல் நாள் இரவு 17 காட்சிகள்தான் திரையிட முடியும் என்றும் அதே நாளில் வேறு படம் வருகிறது என்றும் அதற்கு திரையரங்குகளை ஒதுக்குவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி விட்டனர்.

இது ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரத்தில் வயிற்றில் கட்டையால் அடிப்பதுபோன்ற கொடூர செயல். மக்கள் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்று யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல. திரையரங்கு உரிமையாளர்கள் இந்த போக்கை தொடர்ந்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

திரைத்துறையினரிடம் அக்கறையும் பாசமும் கொண்ட தமிழக முதல்வர் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்சினை வராமல் தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Google+ Linkedin Youtube